குருவிக்காரப் பெண்ணும் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளும்!

 

அந்தப் பெண்ணின்  பேச்சைக் கேட்டவுடன் “இந்தப் பெண்தான் நம் பெருமை.. பெரியார் மண்ணை வடநாட்டுக்கு அறிமுகம் செய்ய இதனினும் சிறந்த கலைப்படைப்பு கிட்டுமா?” என்று டிவிட்டரில் என் கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.

பலரும் அசுவினி என்ற அந்தப் பெண்ணின் அறச்சீற்றத்தைப் பதிவு செய்திருந்தார்கள். அது நாம் காணொளியில் கண்ட உண்மை.  அந்த அநீதி நிகழ்ந்தபோது அதைக் கண்டுகொள்ளாமல் பந்தியில் அமர்ந்திருந்தோரின் அலட்சியம் என்பது காணொளி காட்டாத உண்மை.

சாப்பிட உட்கார்ந்த பெண்ணின் இலையை இழுத்தெறிந்த போது, கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்று கெஞ்சிய பெண்ணை கம்பால் அடித்து விரட்டியபோது, பந்தியிலமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தகோடிகளில் ஒருவர் கூட ஏன் பேசவில்லை? இதைப் படமெடுத்து முகநூலில் வெளியிட்டு “லைக்” வாங்கும் ஆசை கூட ஒருவருக்கும் ஏன் வரவில்லை?

ஏனென்றால் “பந்தியில் நுழைந்த நாயை விரட்டுவதும், குருவிக்காரப் பெண்ணை விரட்டுவதும் இயல்பே” என்று கருதி அவர்கள் தம் சாப்பாட்டில் கவனம் குவித்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் அனைவரின் தொண்டைக்குள்ளும் சோறு தடையின்றி இறங்கியிருக்கிறது.

ஒருவேளை அசுவினியின் பேட்டி சமூக ஊடகத்தில் வெளிவந்திருக்காவிட்டால், கணக்கில் சேராத சாதிக்கொடுமைகளில் ஒன்றாக இது கரைந்து போயிருக்கும்.  சம்பவம் அரசின் கவனத்துக்கு வந்தவுடன் அந்தப் பெண்ணைத் தேடிப்பிடித்திருக்கின்றனர்.  அமைச்சர் சேகர்பாபு, அத்தொகுதி வி.சி.க சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி ஆகியோர் அந்தப் பெண்ணுடன் அமர்ந்து உணவு அருந்தியிருக்கின்றனர். இப்போது மாவட்ட ஆட்சியர் அவர்களது குடியிருப்புக்குச் சென்று அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து ஆவன செய்கின்றனர்.

திமுக அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்பதில் ஐயமில்லை. நாம் தெரிவிக்கும் பாராட்டுகளை விட, அரசின் நடவடிக்கை அப்பெண்ணின் சமூகத்தினருக்கு அளித்திருக்கக் கூடிய ஆறுதல்தான் முக்கியமானது. அந்தப் பெண்ணின் பேச்சை நினைத்துப் பார்க்கும்போது, மனதில் குற்றவுணர்ச்சியும், பெருமிதமும் ஒருசேர எழுகின்றன.

000

குருவிக்காரப் பெண்ணுக்கு சுயமரியாதை உணர்வு இருக்க முடியும் என்று பக்த கோடிகளுக்குத் தோன்றாததைப் போலவே படித்த மேதைகளுக்கும் தோன்றவில்லை. இந்தச் சம்பவத்தின் மையப்பிரச்சனை சோறு அல்ல, சுயமரியாதை என்ற எளிய உண்மைகூட  இந்து நாளேட்டில் செய்திக்கு தலைப்பு போட்டவர்களுக்குப் புரியவில்லை. இந்தியர்களின் இரத்தத்திலேயே ஊறியிருக்கும் Hindu Civilizational culture என்று சங்கிகள் ஒருவித புல்லரிப்புடன் கூறுகிறார்களே, அதுதான் இது.

சங்கிகளை எதிர்த்து நிற்போரின் நிலை என்னவாக இருக்கிறது?

சமூக நீதியை “பெற்றுத் தந்தவர்” என்ற அளவிலேயே பலரும் பெரியாரைப் புரிந்து கொள்கிறோம். எனவேதான், அந்தப் பெண்ணுக்கு நியாயத்தைப் “பெற்றுத்தந்த” அரசை பாராட்டுவது என்ற வரம்புடன் நம் சிந்தனை நின்று போகிறது.

பெற்றுத் தந்தவர் என்ற கோணத்தில் அல்லாமல், “தமிழ்ச்சமூகத்துக்கு சுயமரியாதை உணர்வூட்ட வாழ்நாள் முழுதும் கற்றுத் தந்தவர்” என்ற கோணத்தில் பெரியாரின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளும்போதுதான் நம்முடைய  செயலின்மையே நம் கண்ணுக்குப் புலப்படும்.

பெரியாரை அறிந்திருக்கவே வாய்ப்பில்லாத நாடோடி சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிடமிருந்து மிகவும் இயல்பாகச் சீறி எழுகின்ற சுயமரியாதை உணர்வைக் கண்டபோது  பெருமிதமாக இருந்தது. மறுகணம், பெரியாரின் பணியால்  பயன் பெற்ற ( தின்று கொண்டிருந்த அன்னதானச் சோறு உட்பட) பக்தகோடிகளின் தடித்தனத்தை  எண்ணும்போது அவமானமும் குற்றவுணர்ச்சியும் மேலெழும்பின.

பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டவுடன் “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை இந்த அரசு அகற்றிவிட்டது” எனக்கூறி மகிழ்ந்தோம். கருவறைத் தீண்டாமை என்ற “முள்”ளுக்கும், பந்தித் தீண்டாமை என்ற இந்த முள்ளுக்கும் என்ன வேறுபாடு? பந்தியிலிருந்து விரட்டப்பட்ட இந்தப் பெண்ணுக்கும், முடிதிருத்தகத்திலிருந்து விரட்டப்பட்ட தலித்துக்கும் என்ன வேறுபாடு? ஒரு வேறுபாடும் இல்லை.

இந்த முட்கள் அகற்றப்பட்ட “முறை”யிலும் வேறுபாடு இல்லை.

முடிதிருத்தும் கடைக்காரர் மீது அரசாங்கம் வழக்கு போடுகிறது. அர்ச்சகரை அரசாங்கம் நியமிக்கிறது. அந்தப் பெண்ணுடன் அரசாங்கம் (அமைச்சர்) பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறது. நம்முடைய பணி?

திமுக அரசு சிக்சர் அடித்தால் கைதட்டுவதற்கும், டிஃபென்ஸ் ஆடினால் ஊளையிடுவதற்கும் இது  கிரிக்கெட் ஆட்டமல்ல. எனினும், காலரியில் அமர்ந்து “அப்படி ஆடு, இப்படி ஆடு” என்று வழிகாட்டுவதும் விமர்சிப்பதும்தான் அரசியல், சமூக இயக்கங்களின் பணி என்ற அணுகுமுறைதான் மேலோங்கியிருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்ட விசயத்தையே எடுத்துக் கொள்வோமே. அது தமிழக மக்கள் போராடிப் பெற்ற உரிமை அல்ல. இதைச் சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் அதனை முடக்கினர். ஜெ அரசு அவர்களுக்கு துணை நின்றது. அர்ச்சக மாணவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பினைப் பெற்றார்கள் – இப்போது தனியொரு குருவிக்கார சமூகத்துப் பெண் போராடிப் பெற்றிருக்கும் நீதியைப் போல!

000

“தமிழ்ச் சமூகம் தாமரைக்கு  வாக்களிக்க விரும்பவில்லை” என்ற இனிப்பான உண்மையை மட்டுமே நாம் காண விரும்புகிறோம். “தமிழ்ச்சமூகம் சுயமரியாதைக்கு வாக்களிக்கவும் விரும்பவில்லை” என்ற கசப்பான உண்மை,  அவ்வப்போது நம் முகத்தில் அறைந்தாலும் அதனைக் காண மறுக்கிறோம்.

நம் செயலின்மையை மறைத்துக்கொள்வதற்கும், சங்கிகளைக் அடக்குவதற்கும் ஏற்ற அளவுக்கு “விரிவானதாகவும் கூர்மையானதாகவும்” திமுக அரசின் செயல்பாடு அமையவேண்டுமென விழைகிறோம்.

ஒருபுறம் “பாஜக தமிழகத்தில் காலூன்றவே முடியாது” என்று பொளந்து கட்டுகிறோம். இன்னொரு புறம் “இல்லம் தேடிக் கல்வி இயக்கத்துக்குள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் தமிழகமெங்கும் ஊடுருவுவதை எப்படித் தடுக்கப் போகிறீர்கள்?” என்ற அரசை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்புகிறோம்.

ஒருவேளை அமைச்சர் இந்த நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்திருந்தால்? “அன்னதானப் பந்தியிலிருந்து குருவிக்கார சமூகத்துப் பெண் விரட்டப்படுவதை அறநிலையத்துறை ஏன் தடுக்கவில்லை, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருப்பர். இப்படி எழுப்பப்படும் கேள்விகளின் பின்னால் உள்ள அணுகுமுறையில் அதிக வேறுபாடு இல்லை.

இல்லம் தேடி கல்வி இயக்கம் பற்றிய விமர்சனங்கள் வந்தவுடன், அதுபற்றியும்,  தன்னார்வலர்களை தெரிவு செய்யவிருக்கும் வழிமுறை பற்றியும் அரசு தரப்பு விளக்கமளித்தது. “ஆர்.எஸ்.எஸ் ஊடுறுவ திமுக அனுமதிக்கிறது, புதிய கல்விக்கொள்கைதான் இது” என்றெல்லாம் ஆணித்தரமாகப் பேசியவர்கள், தக்க ஆதாரங்களுடன் அரசின் இந்த விளக்கத்தை மறுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்கட்டும்.  “இல்லம் தேடிக் கல்வி இயக்கம் வரப்போகிறது. அதில் நாம் ஊடுறுவோம்” என்று இந்துத்துவ சக்திகள் “உறுமீன் வருமென்று வாடி”க் காத்திருக்கவில்லை. ஊரகப் பகுதிகளை அவர்கள் தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

பொதுமுடக்கத்தால் கல்வியிழந்த பள்ளிச் சிறுவர்களுக்கு டியூசன் எடுப்பது என்ற பெயரில், பல கிராமங்களில் வேலையில்லாப் பட்டதாரிகளை ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். படிப்பு சொல்லித் தருகிறார்களா என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. குத்துவிளக்கு, வழிபாடு, பாரதமாதா போன்ற  “நல்ல விசயங்கள்” பிஞ்சுமனதில் பதிக்கப்படுகின்றனவா என்பதை அவர்கள் கவனமாக சோதித்து அறிந்து கொள்கிறார்கள். இதை எந்த சட்டத்தின் கீழும் அரசால் தடுக்க முடியாது. நாம் மக்கள் மத்தியில் வேர் பிடித்திருந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.

பொதுமுடக்கத்தில் இப்படி ஒரு தேவை ஏழை மாணவர்களுக்கு இருப்பதை நம்மால் ஏன் காண முடியவில்லை? தேர்தல்/பதவி அரசியலுக்கு வெளியே இருக்கிறோம் என்பதையே  தமக்குரிய உயர்தகுதியாகக் கருதி கர்வத்தில் மிதப்பவர்கள் இதைக் காண்பதற்கான வாய்ப்பு இல்லை.

இந்துத்துவ அமைப்புகள் மக்கள் மத்தியிலான வலைப்பின்னலை பதவிக்கு வந்த பின்னர் உருவாக்கிக் கொள்ளவில்லை. அப்படி உருவாக்கிக் கொண்டதனால்தான் பதவிக்கு வந்தனர்.

ஆனால், இந்துத்துவ எதிர்ப்பு சக்திகளான கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளைப் பொருத்தவரை அப்படி ஒரு வலைப்பின்னலை உருவாக்க மெனக்கிடவில்லை.  இப்போதும் அப்படி ஒரு கடமை இருப்பதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

நாம் ஒரு தேர்தல் கட்சியின் மீது பதில் சொல்லவேண்டிய கடப்பாட்டை (accountability) சுமத்துக்கிறோம்.  அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ற முறையில் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் . அதே நேரத்தில் அரசுப் பதவிகளில் இல்லாத இயக்க செயல்பாட்டாளர்களுக்கு அப்படி ஒரு கடப்பாடு (accountability) இருப்பதை உணர்கின்றோமா?

“நீங்கள் பணியாற்றும் ஊரில் மதக்கலவரம் / தீண்டாமைக் கொடுமை நடக்க எப்படி அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை,  இயக்க செயல்பாட்டாளர்களைப் பார்த்து யாரும் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல,  நமக்குத் நாமே அப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வதும் இல்லை. “அரசே நடவடிக்கை எடு” என்று பத்துபேர் அட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றால் பாசிசம் வீழ்ந்துவிடாது. பெருந்திரளான மக்கள் களத்திற்கு வரும்போது மட்டும்தான் அரசின் மீது கருத்து ரீதியான நிர்ப்பந்தத்தைக்கூட ஏற்படுத்த முடியும்.

“சோறு போடாமல் விரட்டுகிறார்கள். பேருந்தை நிறுத்த மறுக்கிறார்கள். அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்தப் பெண் கேட்டிருக்கலாம்.  மாறாக, “இழிவு படுத்தப்படும்போது  எதிர்த்து நிற்காமல், அவமானத்தைச் சகித்துக் கொண்டு போகிறோமே” என்று தன் குருவிக்கார சமூகத்தின் நிலையைச் சொல்லி அவள் குமுறுகிறாள்.

அந்தப் பெண்ணுடைய நெஞ்சில் தைத்த முள்தான் பெரியாரின் நெஞ்சிலும் தைத்திருந்தது. அர்ச்சகர் நியமனத்தின் வாயிலாக அதை திமுக அரசு அகற்றிவிட்டதென நாம் மகிழ்ந்தோம். கருவறைத் தீண்டாமையின் இடத்தில் “உணவறைத் தீண்டாமை” “முடிதிருத்தகத் தீண்டாமை” என முட்கள் அணிவகுத்து வருகின்றன.  

அந்தப் பெண் எதிர்த்துக் கேட்டதில் மட்டுமல்ல, தன் சமூகத்தின் குறைபாடு குறித்த அவளது குமுறலில் தெரிந்த நேர்மையும் சேர்ந்தததற்குப் பெயர்தான் சுயமரியாதை உணர்வு.

-மருதையன்

000

1 comments

  1. சோறு போடாமல் விரட்டுகிறார்கள். பேருந்தை நிறுத்த மறுக்கிறார்கள். அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்தப் பெண் கேட்டிருக்கலாம். மாறாக, “இழிவு படுத்தப்படும்போது எதிர்த்து நிற்காமல், அவமானத்தைச் சகித்துக் கொண்டு போகிறோமே” என்று தன் குருவிக்கார சமூகத்தின் நிலையைச் சொல்லி அவள் குமுறுகிறாள்.

    அந்தப் பெண்ணுடைய நெஞ்சில் தைத்த முள்தான் பெரியாரின் நெஞ்சிலும் தைத்திருந்தது. ……சரியான ஒப்பீடு.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.