செவ்வணக்கம் தோழர் அருணாசலம் !

தோழர் மணி என்கிற அருணாசலம் மறைந்துவிட்ட செய்தியை  காளியப்பன் சொன்னார். சில ஆண்டுகளாக புற்றுநோயால் துன்புற்று இறந்திருக்கிறார்.

1980 இல் நான் மார்க்சிய லெனினிய இயக்கத்துக்கு அறிமுகமானேன். என்னை சந்திக்க வந்தார் தோழர் மணி.  அவர்தான் அமைப்பு வாழ்க்கையில் என் முதல் ஆசிரியன். கருத்த நிறம், கட்டான உடல்வாகு. தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றைச் சேர்ந்த விவசாயி. எந்த கிராமம் என்பதெல்லாம் தெரியாது. கேட்டுக் கொள்வதில்லை – சொல்வதுமில்லை.

தோழர் மணிதான் எனக்கு மார்க்சிய மூலநூல்களை அறிமுகப் படுத்தினார்.  மார்க்சிய அரசியலை அறிமுகப் படுத்துகின்ற தோழர், வறட்டுவாதியாக இருந்தால், அவ்வாறே நமக்கும் கற்பிப்பார்கள். முதற்கோணல் முற்றிலும் கோணலாகிவிடுவதற்கான வாய்ப்பே அதிகம்.  இதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அந்த வகையில் தோழர் மணி வறட்டுவாதப் பார்வை சிறிதும் இல்லாத, சுய சிந்தனையுள்ள தோழர். மா.லெ இயக்கத்தில் இடது தீவிரவாதப் பார்வையின் செல்வாக்கு கோலோச்சிய அந்த நாட்களில், கிராமப்புறப் பின்னணியிலிருந்து வருகின்ற ஒரு தோழர் வறட்டுவாதத்துக்கு ஆளாகாதவராக இருந்தது ஆச்சரியம்.

மார்க்சிய மூலநூல்களின் மீது அவர்தான் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார். வீட்டுக்கு வந்தவரிடம் “சாப்பிடறீங்களா” என்று அம்மா கேட்டால், “இருக்கட்டும்மா” என்று சொல்லிக் கொண்டே,  என்னிடம் “என்ன செய்ய வேண்டும் புத்தகத்தை எடுங்க. அதுல இந்த பாராவை கவனிச்சீங்களா? லெனின் ஏன் இப்படி  சொல்றார் சொல்லுங்க பார்ப்போம்” என்று பேசத் தொடங்குவார். சாப்பிட்டபின் பேசலாம் என்றுகூட அவரால் பொறுக்கமுடியாது. ஏதோ, இதைப் பேசுவதற்காகவே ஊரிலிருந்து கிளம்பி வந்ததைப் போல ! அது ஒரு ஆட்பட்ட நிலை! நானும் ஆட்பட்டேன்.

எம்ஜிஆர் ஆட்சியின் கீழ் தருமபுரியில் தேவாரத்தின் போலி மோதல் கொலைகள் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில்,  கண்டனத் துண்டறிக்கைகள் விநியோகம், சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி, “அரசு வேலை போனால், வெங்காயமாச்சு” என்ற மனநிலை எனக்கு ஏற்படுவதற்கு உதவியவரும் அவர்தான்.

அவருக்கு ஆங்கில வாசிப்பு கடினம். EPW, Frontier, Sunday போன்ற இதழ்களின் குறிப்பான சில கட்டுரைகளை படிக்கச் சொல்லி கேட்பார், விவாதிப்பார். எழுதுவதற்கு என்னை ஊக்குவித்ததும் அவர்தான்.  எல்லாம் 2,3 ஆண்டுகள் மட்டுமே. அப்புறம் அவர் வேறு ஊருக்குச் சென்று விட்டார். நானும் முழுநேர ஊழியனாக தஞ்சையிலிருந்து சென்னை சென்று விட்டேன்.

எங்களுடைய அடுத்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது போலீஸ்தான். 1988 என்று நினைக்கிறேன்.  நேரு சிலை குண்டு வெடிப்பு தொடர்பாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, திருச்சியில் தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த பிரச்சனையை கவனிப்பதற்காக சென்னையிலிருந்து தஞ்சை வந்திருந்தேன். வந்த இடத்தில் என் வீட்டில் போலீஸ் ரெய்டு. நானும் அவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டோம். 4,5 நாட்கள் போலீஸ் கஸ்டடி. சுமார் 20 தோழர்களுக்கு கடும் சித்திரவதை. அவருடைய பெயர் அருணாசலம் என்பதையும் அவருடைய ஊரையும் க்யூ பிரிவு போலீசு சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்.

பிறகு நெடுநாட்களுக்கு நேரடித் தொடர்பில்லை. அவருக்கு விவசாயிகள் மத்தியில் வேலை. எனக்கு பத்திரிகை மற்றும் ம.க.இ.க வேலைகள். பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நிகழும் தற்செயலான சந்திப்புகள்தான்.

“ஏன் நம்மால் மக்களைத் திரட்ட முடியவில்லை, ஏன் அவர்களுடன் ஐக்கியமாக முடியவில்லை” என்ற கேள்விகள் குறித்து அவர் இடையறாமல் சிந்தித்ததை நான் அறிவேன். பெரும்பாலான தோழர்கள் – என்னையும் உள்ளிட்டு – கையிலிருக்கும் வேலைகளிலேயே மூழ்கி, தலையை நிமிர்த்திப் பார்க்காத வண்டி மாடுகளைப் போல ஓடிக்கொண்டிருந்த போது, அவர் இந்த ஓட்டத்திலிருந்து விலகி நின்று சிந்தித்தார். அவ்வப்போது அமைப்பு ரீதியில் இவ்விசயங்களை விவாதிக்கவும் செய்தார். அவரை தலைமைப் பொறுப்புக்கு வரும்படி வலியுறுத்தியிருக்கிறேன். அவர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார்.

ஒரு மாற்றுப்பாதை குறித்த புரிதல் இருந்தும், தனக்கு அதனை தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை என்பது போன்ற தவிப்பு அவரிடம் வெளிப்பட்டதை நான் அவதானித்திருக்கிறேன். கவிதைக்குரிய சொல் கிடைக்காத கவிஞனின் வேதனையைப் போன்றவொரு வேதனை அது!

வரம்புக்குட்பட்ட அளவில் தேர்தலில் பங்கேற்பது, மக்களுடன் ஐக்கியப்படுவதற்கு உதவும் என்று அவர் கருதினார். முன்வைத்தார். அக்கருத்து பெரும்பான்மை தோழர்களால் ஏற்கப்படவில்லை. தனது கருத்து நிராகரிக்கப்பட்ட போதிலும்  அமைப்பின் நிலைப்பாட்டின்படியே  தளராமல் பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டார். ஒரு  கட்டத்தில் விலகல் தவிர்க்கவியலாததாகியது. அமைப்பிலிருந்து விலகினார்.

30 ஆண்டுகள் அமைப்புக்காகவும் மக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த ஒரு தோழர், எஞ்சிய நாட்களுக்கு என்ன செய்வார் என்று  சிந்திக்க வேண்டிய பொறுப்பில் நானும் இருந்தேன். விலகல் தோற்றுவித்த வருத்தமும்,  இனி என்ன செய்வார் என்ற சிந்தனையும் சில நாட்கள் என்னிடம் இருந்தன. பின்னர் மங்கி மறைந்து விட்டன.

அமைப்புப் பணி – சமூகப்பணி என்ற “பெரிய” காரியங்களில் ஈடுபட்டிருப்பதாக எண்ணிக் கொள்ளும் மமதை, “சின்ன” மனிதப் பண்புகளை இல்லாமல் ஆக்கிவிடுகின்றது. நிறம் சிவப்பு என்றாலும், இதன் தன்மை அதிகார வர்க்கத் தடித்தனம்தான்.

“மருதையன் கூட கேட்கவில்லையே” என்று தன்னிடம் சொல்லி வருந்தியதாக வேறு ஒரு தோழர் மூலம் அறிந்தேன்.  செருப்பால் அடி பட்டதுபோல குறுகிப்போனேன். அவமானம் என்பது ஒரு கணம்தான். தோழருடைய முகம் மனதில் தோன்றும் தருணங்களிலெல்லாம் ஏற்படுகின்ற குற்றவுணர்ச்சிதான் என் தவறுக்குரிய தண்டனை.

எனக்கு மார்க்சியத்தை அறிமுகம் செய்த முதல் ஆசிரியனுக்கு செவ்வணக்கம்!

2 comments

  1. செவ்வணக்கம். மிக சிறந்த ஆசிரியரை உருவாக்கியதற்கு நன்றி.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.